’பூங்காற்று’, ‘கண்ணே கலைமானே’, ‘பொன்மேனி உருகுதே’ என படத்தின் அத்தனை பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் இப்போதும் தமிழர்களின் மனதை உருக்கிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு என 2 தேசிய விருதுகளைக் ’மூன்றாம் பிறை’ குவித்தாலும் இன்னும் மக்கள் மனதில்; நினைவில் அழியாமல் கொண்டாடப்படுவதே இப்படத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த விருது. கடந்த 1982 ஆம் ஆண்டு காதலின் மாதமாக போற்றப்படும் இதே பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ’மூன்றாம் பிறை’ வெளியாகி 300 நாட்களுக்குமேல் வெற்றிகரமாக ஓடியது.
தமிழக வரலாற்றில் 1982 ஆம் ஆண்டு ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தது, காமராஜரால் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் ‘ஊட்டச்சத்து திட்டம்’ என மாற்றப்பட்டது என முக்கியமாக நடந்த அரசியல் நிகழ்வுகள் போல, தமிழ் சினிமாவில் ‘மூன்றாம் பிறை’ என்னும் வலி மிகுந்த காதல் கவிதையைப் படைத்து 1982 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம்பிடித்தார் பாலு மகேந்திரா.
இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி கனவில் அல்ல… கற்பனையில் கூட யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று ஏங்க வைக்கும். ’மூன்றாம் பிறை’ வெளியாகி 40 ஆண்டுகள் ஆனதையொட்டி , இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதோடு, இளையராஜாவை பாராட்டி அறிக்கையையும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.