நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 51 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது.
தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாபைச் சந்தித்து அவருடன் இணைந்து மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்து சான்றிதழைப் பெற்றனர். பின்னர் அனைவரும் கூட்டாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் சேர்மன் போன்ற பொறுப்புகளுக்கான தேர்தலின்போது கட்சித் தலைமை யார் பெயரையும் அறிவிக்காததால் தி.மு.க-வில் வசதி படைத்த பலரும் கோதாவில் இறங்கினர். அதனால் கட்சிக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த முறை மேயர் வேட்பாளைரை கட்சித் தலைமையே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி மேயர் கனவுடன் தி.மு.க-வில் பலரும் இருக்கிறார்கள். 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ராஜூ, முன்னாள் தச்சநல்லூர் மண்டல சேர்மன் சுப்பிரமணியன், மத்திய மாவட்ட மகளிரணி செயலாளர் மகேஸ்வரி, 12-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள கோகிலவாணி, இளைஞரணி அமைப்பாளரான கோட்டையப்பன் கருப்பசாமி, கிட்டு என்கிற கிருஷ்ணசாமி, ரவீந்திரன், 40-வது வார்டில் வென்ற வில்சன் மணித்துரை, உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.
மேயர் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பாக வசதி படைத்த யாராவது அவர்களிடம் குதிரை பேரம் நடத்தி விடக்கூடும் என்கிற சந்தேகம் நிலவுவதால், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப் அனைவரையும் வெளியூருக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பெண் வேட்பாளர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் செல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இன்று தங்கும் அவர்கள் பின்னர் அங்கிருந்து கேரளாவின் பூவாறு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி நிலவுவதால் தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து குதிரை பேரம் நடப்பத்தைத் தடுக்க முயற்சி நடப்பதாத் தெரிகிறது. இருப்பினும், மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கும் மார்ச் 2-ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.