லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்!

பீகார்
முன்னாள் முதல்வர்
லாலு பிரசாத் யாதவ்
உடல் நலக்குறைவு காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழுவின் தலைவர் வித்யாபதி கூறுகையில், “லாலு பிரசாத் யாதவின் ரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக உள்ளது. அவரது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 130 முதல் 160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சிறுநீரக நோயின் நான்காம் நிலை நோயாளி. தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீத திறனில் மட்டுமே செயல்படுகிறது. அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தொடர்ந்து ஐந்தாவது வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், தீர்ப்பு விவரத்தை நேற்று அறிவித்தது. அதன்படி, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,
கால்நடை தீவன ஊழல்
வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சிறையில் இருக்கிறார். இதனிடையே, அவரது உடல்நிலையை கருதி அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.