கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலே இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே பரபரப்பாகத் தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க பெரிய அளவில் நகராட்சி, மாநகராட்சி என ஏதும் கைப்பற்றாவிட்டாலும், ஆங்காங்கே கணிசமான எண்ணிக்கையில் வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது. ஒருசில இடங்களில் ஒரு வாக்கு வித்தியாசத்திலும் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்றுள்ளனர், சில இடங்களில் ஒற்றை வாக்கு மட்டுமே பெற்றும் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். முக்கியமாக, சென்னை மாநகராட்சியின் 134 வார்டில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகள் பெற்று, 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பா.ஜ.க-வின் வெற்றியை வெளிப்படுத்தும்விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “இன்றைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத பா.ஜ.க-வின் வெற்றி, பிரதமர் மோடியின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிக்காட்டுகிறது. மக்களின் அன்பை பிரதமருக்கு நாம் அர்ப்பணிப்போம். தேர்தலில் வழிகாட்டியமைக்காக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இன்று வெளியான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பா.ஜ.க., மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள் மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.