'வலிமை' முன்பதிவு : தமிழ் சினிமாவை மீட்டுத் தருமா ?
வலிமை படத்திற்கான முன்பதிவு கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஒமிக்ரான் அலை தாக்கம் இருந்தாலும் தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்படாமல் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த படங்கள் எதுவும் சுமாராகக் கூட ஓடவில்லை என்பதே உண்மை. முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது வெளிவந்தால் மட்டுமே மீண்டும் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க முடியும் என தியேட்டர்காரர்கள் ஏக்கத்துடன் இருந்தார்கள்.
அந்த ஏக்கத்தை 'வலிமை' படத்திற்கான முன்பதிவு ஓரளவு போக்க ஆரம்பித்துள்ளது. வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி விடியற்காலை 4 மணிக்கு நடைபெற்ற உள்ளது. அந்தக் காட்சிக்கான முன்பதிவுகள் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் முடிந்துவிட்டதாகத் தகவல். 500, 1000, 1500, 2000 என ஊருக்குத் தகுந்தபடி டிக்கெட்டுகள் விற்கப்படுகிறதாம். அது மட்டுமல்ல முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகளின் முன்பதிவு 90 சதவீத அளவிற்கு முடிந்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், முதல் நாளைத் தவிர அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கான முன்பதிவு மிகக் குறைந்த அளவே உள்ளது. படம் வெளிவந்து நன்றாக இருக்கிறது என்று தகவல் வந்தால் மட்டுமே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்களோ என்ற சந்தேகமும் தியேட்டர்காரர்களிடம் இருக்கிறது.
கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே பெரிய வசூலைக் கொடுத்து தியேட்டர்காரர்களுக்கும் லாபத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு கடந்த வருடத்தில் வெளியான படங்களில் 'மாஸ்டர்' வசூலை எந்தப் படமும் மிஞ்சவில்லை.
ஆனால், 'வலிமை' படம் 100 சதவீத இருக்கை அனுமதியுடன் வெளியாக உள்ளது. அதனால், 'மாஸ்டர்' அளவிற்கோ அல்லது அதை விட அதிகமான வசூலையோ 'வலிமை' தரும் என்பது தமிழ்த் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அது நிறைவேறுமா என்பது படம் வெளிவரும் அன்று தெரிந்துவிடும்.