நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தமிழகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்துப் பகுதிகளும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோவை ஜிசிடி தொழில்நுட்பக் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குமென்பதால் கோவை ஜிசிடி கல்லூரி முன்பு பல்வேறு கட்சி முகவர்களும், கட்சி தொண்டர்களும் உற்சாகமாக குவிந்துள்ளனர்.
அதேபோல் பொள்ளாச்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ஜிஎம் கல்லூரி முன்பு அதிகாலையிலிருந்தே முகவர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு 200 மீட்டர் இடைவெளியில் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களை தீவிர சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.