உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.சோனியா காந்தி நேற்று தனது தொகுதி மக்களிடம் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
கரோனா ஊரடங்கின் போது தொழில்கள் முடங்கின. புலம்பெயர் தொழிலாளர்கள் பல மைல் தொலைவு நடந்தே வீடு திரும்பினர். அப்போது மத்தியில் ஆளும் மோடி அரசும், உ.பி.யில் ஆளும் ஆதித்யநாத் அரசும் மக்களின் வலியை புரிந்து கொள்ளவில்லை. மக் களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை விண்ணை தொடுகிறது. அன்றாட வாழ்வை நடத்துவதற்கு மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயரும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் அவர்களின் துயரங்கள் மட்டுமே இரு மடங்காகி உள்ளது.
இளைஞர்கள் படித்துவிட்டுவேலைக்காக காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச் சினையாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசில் சுமார் 12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப அரசு தயாராக இல்லை.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார். -பிடிஐ