கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா நேற்று முன்தினம் இரவு வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு நகரின் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் ஹர்ஷா கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 21 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஷிவமொகா எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாவட்டத்தில் தடை உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை காலை வரை அமலில் இருக்கும் எனவும், அதுவரை பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்… கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: சித்தராமையா குற்றச்சாட்டு