ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர்.
இதனிடையே இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த தொடரின் முதல் போட்டியில் 24*, 2வது போட்டியில் 33, 3வது போட்டியில் 35* என இக்கட்டான நேரத்தில் அணிக்கு கைக்கொடுத்து உதவினார். அதேபோல் 3வது போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய போது அவரின் மீதமுள்ள 2.1 ஓவர்களையும் வீசிய அவர் பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயருக்கு அதிகமாக வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் பாண்ட்யா பந்து வீசுவரா அல்லது முழுமையாக உடல் தகுதியை பெற்றுள்ளாரா என்று தெரியாத இந்த நேரத்தில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான பார்மில் இருப்பதாக தான் கருதுவதாகவும், ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டால் நிலைமை மாறலாம் எனவும் ஜாபர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடுவதற்கான தகுதியை வெங்கடேஷ் ஐயர் நெருங்கியுள்ளார் என வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.