புதுடில்லி : நாட்டில், 12 முதல், 18 வயதுடைய சிறுவர்களுக்கு, ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் கீழ் செலுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுகாக்க, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் துவங்கியது.இருப்பினும், ’15 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள, ‘பயாலஜிகல் – இ’ நிறுவனம் தயாரிக்கும் ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை, 12 முதல் 18 வயதுடையோருக்கு அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் செலுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, ‘பயாலஜிகல் – இ’ நிறுவனத்தின் அறிக்கை:கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 5 முதல் 18 வயதினருக்கு செலுத்தி பரிசோதனை நடத்துவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனை முடிவுகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உள்நாட்டு தயாரிப்பான இத்தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு திறன் சிறப்பாக உள்ளது.
இதன் அடிப்படையில், 12 முதல் 18 வயதினருக்கு அவசர கால பயன்பாட்டின் கீழ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இத்தடுப்பூசியை, 28 நாள் இடைவெளியில் இரு ‘டோஸ்’ செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அனுமதி கோரும் ‘கோவோவாக்ஸ்’
மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள ‘சீரம்’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதற்கிடையே, 12 முதல் 17 வயதுடையோருக்கான ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசியை தயாரித்துள்ள நிறுவனம்,
அதற்கான முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, ‘அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் இத்தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்திடம் சீரம் நிறுவனம் கோரியுள்ளது.