Tamilnadu Local Body Election : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக வழக்கம் போல சட்டமன்ற தேர்தலில் தனது கூட்டணியில் இருந்த அதே கட்சியுடன் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால் மறுபுறம் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாமக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அதிமுக பாஜக கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்து.
தற்போது நகர்புற உள்ளட்சி தேர்தலிலும் கூட்டணியில், அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், பாமகவும் தனித்து போட்டியிட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்த சிறு கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்நிலையில், கூட்டணியில் இருந்து விலகிய பாமக அதிமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்து. அந்த தேர்தலில் கனிசமாக வெற்றி பெற்ற பாமக தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலையும் தனித்து சந்தித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி என மொத்தம் 12,838 இடங்களுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 57778 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், மாநகராட்சியில் 52.22 நகராட்சியில் 68.22 மற்றும் பேரூரட்சியில் 74.68 என தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள மூலம் பதிவான இந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் கட்சியான திமுக பல இடங்களில் முன்னணிலை பெற்று வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமக சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளிலும், இடங்கணசாலை நகராட்சியில் 2 வார்டுகளிலும் ஈரோடு சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி 73 இடங்ளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் 5 வார்டுகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வார்டுகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் 11 வார்டுகளிலும், சேலம் மாவட்டத்தில் 15 இடங்களிலும், அதிகபட்சமாக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூறப்படும் பாமக தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளது.