500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலையை இணையதளம் மூலமாக ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.
அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜூ கோவிலில் இருந்த அனுமன் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு இரவில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான ராஜராமன் என்பவர் இணையதளங்களில் திருடப்பட்ட அனுமன் சிலை குறித்து தேடிய போது, www.christy.com என்ற இணையதளத்தில் காணாமல் போன அனுமன் சிலை போல இருந்துள்ளது. உடனே அந்த அனுமன் சிலை புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை காணாமல் போன சிலையுடன் ஒப்பிட்டு பார்க்க இந்திய தொல்லியல் துறை மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
நிறுவன அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த போது காணாமல் போன அனுமன் சிலை என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சிலை கிறிஸ்டி என்பவரால் ஆஸ்திரேலியா நாட்டில் ஒருவருக்கு ஏலம் விடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிலையை மீட்க அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு உதவியுடன், திருப்பி அனுப்ப பரஸ்பர சட்ட உதவியை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவதுறை துவங்கியது. விசாரணையில் அனுமன் சிலையை கிறிஸ்டி ஏலம் மூலமாக 37500 டாலருக்கு ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில், ஆஸ்திரேலிய பொறுப்பாளர் மைக்கெல் கோல்ட்மேன் என்பவர், திருடப்பட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையான இந்த இந்திய சிலையை இந்திய உயர் ஆணையர் மன்பீரித் வொஹ்ராவிடம் ஒப்படைத்தார். மேலும் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டு, நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியின் ஏல மையத்தில் விற்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் அச்சிலையை விலைக்கு வாங்கிய நபரிடமிருந்து திருடப்பட்ட இந்த சிலையை மீட்க தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, இந்திய சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து செயல்பட்டனர்.
கிறிஸ்டியின் ஏல இல்லமும் ஆஸ்திரேலியாவில் சிலை வாங்கியவரும் திருடப்பட்ட சிலையின் தொன்மையைப் பற்றி ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால், எச்சரிக்கப்பட்ட பின்னரே திருடப்பட்ட கலைப்பொருளை மீட்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர்.
ஆஸ்திரேலியாவின் பொறுப்பாளர் திருடப்பட்ட சிலையை ஒப்படைக்கும் போது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய சட்ட அமலாக்க முகவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சிலையை மீட்டெடுத்ததற்காகவும், கலாச்சார கலைப்பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்த்துப் போராட ஒத்துழைத்ததற்காகவும், தனது பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த சிலை இந்தியாவுக்கு வர ஒரு மாத காலம் ஆகலாம்.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐம்பொன் சிலை மாதிரியைப் பெற்ற பிறகு அச்சிலை அதிகாரிகளால் உரிய கோவிலுக்கு ஒப்படைக்கப்படும் என தமிழக சிலை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM