லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 58 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் 2ம் கட்டமாக நடந்த தேர்தலில் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்களும், நேற்று முன்தினம் நடந்த 3ம் கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் 627 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்நிலையில் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பிலிபித், லக்கிம்பூர் கேரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா, பதேபூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளில் நாளை (பிப். 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கண்ட 59 பதவிகளுக்கு 624 வேட்பாளர்கள் போட்டியுள்ளனர். நான்காவதாக நடைபெறும் நாளைய வாக்குப்பதிவிற்கு 2.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 4ம் கட்ட முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் ஆளும் பாஜக அமைச்சர்கள் பிரஜேஷ் பதக், அசுதோஷ் டாண்டன், சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங், காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய ரேபரேலி எம்எல்ஏ அதிதி சிங் ஆகியோர் அடங்குவர். நேற்று மாலை நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ரேபரேலி (சோனியாவின் எம்பி தொகுதி) தொகுதியை ஆளும் பாஜக அரசு ‘மாற்றாந்தாயாக’ பார்க்கிறது. பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை’ என்றார். மேலும், லக்னோவில் நடந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று வாக்கு சேகரித்தார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நாளையுடன் 4 கட்ட வாக்குபதிவு முடிவுறும் நிலையில் இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டியுள்ளது. வரும் மார்ச் 3ம் தேதியுடன் 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுற்று மார்ச் 10ம் தேதி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.மணிப்பூரில் மோடிக்கு எதிர்ப்பு மணிப்பூரில் வரும் 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இம்பாலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்நிலையில் மணிப்பூரில் தடை செய்யப்பட்ட 6 ஆயுதக் குழுக்கள் வௌியிட்ட அறிவிப்பில், ‘மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எங்களது எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இன்று (நேற்று) நள்ளிரவு முதல் பிரதமர் டெல்லி செல்லும் வரை மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளனர். அதனால், மணிப்பூர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.