வாகனங்களின் எரிபொருள், தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றம் எனக் காற்று மாசுபாடு வீட்டிற்கு வெளியேதான் இருக்கிறது என்றால், வீட்டிற்கு உள்ளேயும் சமையல் வேலைகள், பழையதை எரிப்பது, செல்லப்பிராணிகள் வளர்ப்பு எனப் பல காரணங்களால் காற்று மாசு காணப்படுகிறது.
இப்படி வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டை சின்ன சின்ன விஷயங்களை கவனித்து செய்வதன் மூலமாகக் குறைக்க, தவிர்க்க முடியும். அவை இங்கே..
1. ஜன்னல்கள்
வீட்டின் உள்ளே உள்ள காற்று மாசுபாட்டை குறைப்பதில் ஜன்னல்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜன்னல்களை அவ்வப்போது திறந்து வைக்கவும். இதன் மூலம் வீட்டுக்குள் இருக்கும் காற்று வெளியேற்றப்பட்டு, நல்ல வெளிக் காற்றோட்டம், சூரிய ஒளி கிடைக்கும்.
2. வாசனை பொருட்களை தவிர்க்கவும்
வீட்டில் இருக்கும் துர்வாசனையை நீக்குவதற்கு எனப் பயன்படுத்தும் ஏர் ஃப்ரெஷ்னர்கள், வாசனை மெழுகுவத்திகள், தூபங்கள் மற்றும் பிற வாசனை திரவியங்களைத் தவிர்க்கவும். இவை காற்றில் ரசாயனத்தை கலக்கும்.
3. எக்ஸாஸ்ட் ஃபேன்
சமையல் புகையை அகற்ற சமையலறையிலும், நீராவியை அகற்ற குளியலறையிலும் எக்ஸாஸ்ட் ஃபேன்களை இயக்கவும். இதனை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
4. செல்லப்பிராணிகள் வளர்ப்பு
செல்லப்பிராணிகளின் ரோமம் உதிர்வதால் வீட்டுக்குள் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை அடிக்கடி குளிக்க வைக்கவும். முடிந்தால் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் அனுமதித்து முடித்த பின்னர் உடனே வீட்டை சுத்தம் செய்துவிடவும். துடைப்பம் பயன்படுத்துவதை விட வாக்யூம் கிளீனர் கொண்டு வீடு சுத்தம் செய்யவும்.
5. புகையை தவிர்க்கவும்
வீட்டில் புகை ஏற்படும் வகையில் எதையாவது எரிப்பதை செய்யக் கூடாது. மேலும் வீட்டினுள் புகைப்பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
6. டோர்மெட்
வீட்டின் நுழைவுவாயிலில் உள்ள டோர்மேட்டில் கால்/காலணிகளை துடைத்துவிட்டு வரவும். வெளியில் செல்லும்போது பயன்படுத்தும் காலணிகளை வீட்டுக்கு உள்ளே வைக்காமல் வெளியே விடுவது நல்லது.
7. ஏர் ப்யூரிஃபையர்
வீட்டின் உட்புறக் காற்றில் உள்ள அனைத்து மாசுகளையும் ஏர் ப்யூரிஃபையர் அகற்றாது. என்றாலும், ஒவ்வாமை ஏற்படுத்தும் மாசுபடுத்திகளை குறைக்க உதவும்.
8. இண்டோர் செடிகள்(indoor plant)
உட்புறத்தில் காற்றை சுத்தப்படுத்தும் வகையிலான பல செடிகள் உள்ளன. மேசையில் வைப்பதற்கு, சமையலறையில் வைப்பதற்கு எனப் பல செடிகள் உள்ளன . வீட்டின் உட்புற மாசை குறைப்பதற்கு இவை உதவும்.