Urban Local Body Elections Results: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில், இன்று(பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சென்னையை பொறுத்தவரை சுமார் 15 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 10 மணிக்கு முடிவு தெரியும்
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்படும் அறிவிக்கப்படும்.காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் மூடல்
மேலும், தேவையற்ற மோதல்களை தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள 268 இடங்களைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களை இன்று முழுவதும் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4ஆம் தேதி மறைமுக தேர்தல்
தொடர்ந்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ள வார்டு உறுப்பினர்கள், இந்த பதவிகளுக்கான தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
கோவை மாவட்டம் பெரியநெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8-ல் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிமுகவினர் திடீர் ரகளையால் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது!
கடலூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சாவி தொலைந்ததால், 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக முகவர்கள் காத்திருக்கின்றனர். சென்னை, எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதம்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோயில் தனியார் கல்லூரியில் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டது.
தமிழகத்தில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன