‘வலிமை’ பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பல நாள்கள் காத்திருப்புக்கு பிறகு இந்தப் படத்தை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஜெயராமன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அஜித் குறித்தும், ‘வலிமை’ ரிலீஸ் குறித்தும் பதிவு செய்திருக்கிறார்.
“புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா?” என்று கேள்வி கேட்டு இதை அவர் பதிவிட்டிருக்கிறார்.
இந்தச் சந்தேகம் வருவதற்கு அவர் கூறும் காரணம், “வலிமை படத்தின் முதல் பாடலாக ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ எனத் தாயைப் பற்றி வெளியான பாடல் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினமான டிசம்பர் 5 அன்று பதிவேற்றப்பட்டது. நாளை பிப்ரவரி 24 ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரவிருக்கிற நிலையில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகிறது.”
மேலும் அந்தப் பதிவில் பூங்குன்றன், “அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம்தானே! அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக படம் வெளியிடப்படுகிறதா என்பதற்கு படம் வந்த பிறகே விடை கிடைக்கும்” என்று தெரிவித்துளளார்.
பூங்குன்றன் நீண்ட நாள்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.