டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி(AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப்பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டநிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், RITES நிறுவன பிரதிநிதிகள் மற்றும் இலங்கை புகையிரத திணைக்கள அதிகாரிகள் அந்த ரயிலில் பயணித்துள்ளனர்.
இந்தியாவால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்த ரயில் (AC DMU) வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட முதலாவது ரயில்(AC-DMU) 2022 ஜனவரி 09ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2. இலங்கைக்கான ரயில்தொகுதிகள் விநியோகம், புகையிரத பாதைகளை தரமுயர்த்தல் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கும் கோரிக்கைக்கும் அமைவாக பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையிலான ஏனைய திட்டப்பணிகள் ஆகியவற்றுக்காக இந்த 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி திட்டத்தை வழங்க 2014-15 காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்தியாவால் வழங்கப்பட்ட உயர் தரமுடைய ரயில் பெட்டிகள் மற்றும் AC DMU ஆகியவை இலங்கையின் புகையிரத கட்டமைப்பையும் பயண அனுபவத்தையும் மேலும் வலுவாக்கியுள்ளன. இக்கடனுதவி திட்டத்தின்கீழ் புகையிரத பாதைகள் தரமுயர்த்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமுலாக்கத்தின் வேறுபட்ட கட்டங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3. கொழும்பு முதல் மாத்தறை வரையான ரயில் பாதையை தரமுயர்த்தல், ஓமந்தை முதல் பளை; மடு தேவாலயம் முதல் தலைமன்னார்; மதவாச்சி முதல் மடு; மற்றும் பளை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் பாதைகள் அமைப்பு, சமிக்கை தொகுதிகளை பொருத்துதல், மற்றும் இலங்கை புகையிரத சேவைக்கு தேவையான ரயில் தொகுதிகள் விநியோகம் ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் உதவி திட்டம் பங்களிப்பு செய்துள்ளது. இலங்கையில், ரயில்வே உட்கட்டமைப்பின் அபிவிருத்தி மற்றும் ஏனைய வசதிகள், வேலை வாய்ப்பு உருவாக்கம், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகள், பொருளாதார வளர்ச்சி, மற்றும் மேம்பட்ட தொடர்பாடல் ஆகியவற்றுக்கு இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த திறன் மற்றும் உதவிகள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள துறையான புகையிரத சேவை உட்பட போக்குவரத்து துறை சார்ந்த விடயங்களில் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பினை தொடர்வதற்கு இந்தியா விரும்புகின்றது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
20 பெப்ரவரி 2022