பெங்களுரூ: “இந்து, முஸ்லிம் சகோதரர்கள் தங்களது பெற்றோருக்கு நல்லப் பிள்ளைகளாக இருங்கள்; மற்றதெல்லாம் வேண்டாம்“ என்று கர்நாடகாவில் கொல்லப்பட்ட ஹர்ஷாவின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சீகேஹட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் ஷிமோகா, பத்ராவதியில் நடத்திய போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.
அப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே திங்கள்கிழமை மாலை நடந்த ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. காவி கொடி ஏந்தி ஊர்வலமாக சென்ற இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார், 2 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்தக் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட ஷர்ஷாவின் சகோதரி, கலவரங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அஷ்வினி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் அஷ்வினி பேசியது: “ஹர்ஷா வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை. இந்து… இந்துத்துவா என்று மட்டுமே இருந்ததன் காரணமாக எனது தம்பி இந்த நிலையில் இருக்கிறான். இதை அனைவரும் பாருங்கள். நான் அனைத்து சகோதரர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். அது இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உங்களது பெற்றோர்களுக்கு நல்லப் பிள்ளைகளாக இருங்கள். மற்றதெல்லாம் வேண்டாம். பஜ்ரங் தள் குறித்து எனது தம்பி குடும்பத்தில் எதுவும் சொல்லவில்லை. அவர்களைப் பற்றி நல்ல முறையில்தான் எங்களிடம் கூறினார்.” என்று தெரிவித்திருக்கிறார்.