மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் – 2022 ,மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இன்று 22.02.2022 திகதி காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின்போது மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வங்கிகள் ஊடாக குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை அரசு வங்கிகளின் ஊடாக பெற்றுக்கொடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நீர்ப்பாசனம் தொடர்பாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள், தேசிய உரச் செயலகத்தினால் விவசாயிகளுக்கும், சேதனைப்பசளை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சலுகைகள் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள விதை மற்றும் நடுகை பொருட்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு கடந்த போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான விவசாய கமநல காப்புறுதி சபையின் ஊடக வழங்கப்படவுள்ள நட்ட ஈட்டுக்கொடுப்பனவு தொடர்பாகவும், 2022 இற்கான சிறுபோக பயிர்ச்செய்கைக்கான கால அட்டவணை தயாரிப்பது தொடர்பாகவும், விவசாயிகள் தொடர்பான ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள்சார் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது உன்னிச்சை குளத்திலிருந்து நீர்பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரினை எடுத்துச் செல்லும் இடது மற்றும் வலது கரை வாய்க்காலினை எதிர்வரும் காலத்தில் கொங்கிறிட் இட்டு செப்பனிட்டு தருவதாக உறுதியளிக்கப்பட்டதற்கும், இம்முறை விவசாயிகள் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்காவண்ணம் தமது திட்டங்களை நீர்ப்பாசன திணைக்களம் செயற்படுத்தியமைக்காகவும் இதன்போது விவசாயிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயம் சார் முன்னேற்ற அறிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், தேசிய உரச்செயலகத்தின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய கமநல காப்புறுதி சபையின் அதிகாரிகள், வங்கிகளின் உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம் பசுமை புரட்சி காணவேண்டும் அதுவே எமது அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் எதிர்பார்ப்பு, அவரின் அந்த எதிர்பார்ப்பை நாம் அனைவரும் ஒருமித்து செயற்படுவதன் ஊடாகவே செயல்வடிவத்திற்கு கொண்டுவர முடியும், அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற, ஆரோக்கியமான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் அதற்காக இயற்கைப் பசளை உற்பத்தியை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைப்பதுடன், இயற்கை உரப்பாவனையை முழுவதுமாக நடைமுறைப்படுத்த அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.