403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
5-ம் கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாராபங்கி பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
உ.பி.யின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தத் தேர்தல் அவசியம். நாட்டின் மொத்தப் பரப்பளவில் உ.பி.,யின் பரப்பளவு 7% ஆக இருக்கலாம். ஆனால், அதன் மக்கள் தொகையைப் பார்த்தால் அது இந்தியாவின் மக்கள்தொகையில் 16%-க்கும் அதிகமாக உள்ளது. இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள்.
தொடர்ந்து அமேதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தத்தெடுத்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.900- ரூ.1000 வழங்குவோம்.
சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை முற்றிலுமாக தடை செய்துள்ளோம். ‘கௌமாதா’வை படுகொலை செய்ய விடமாட்டோம். விவசாயிகளின் வயல்களை தெரு கால்நடைகளிடமிருந்து பாதுகாப்போம் என்றும் உறுதியளிக்கிறேன்.
2017க்கு முந்தைய ஆட்சியில் மாநிலத்தில் காலிப்பணியிடங்கள் இருந்தபோதெல்லாம், வேலை வழங்க பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் வந்த பிறகு இளைஞர்களுக்கு 5 லட்சம் அரசு வேலைகளை வழங்கியுள்ளோம் என்று கூறினார்.
இதற்கிடையே, பஹ்ரைச்சல் பிரசாரம் செய்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகும். மார்ச் 11-ம் தேதி லக்னோவில் இருந்து கோரக்பூருக்கு புறப்பட முதல்வர் யோகி ஆதித்யநாத் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து தயாராகிவிட்டார். பாஜகவுக்கு எதிராக பொதுமக்கள் 440 வோல்ட் மின்னோட்டத்தில் உள்ளனர்” என்றார்.
இதையும் படியுங்கள்..
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் – கமல்ஹாசன்