தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் புதுவசந்தம் அணியும் பாக்யராஜ் தலைமையில் இமயம் அணியும் உக்கிரமாக மோதுகிறார்கள்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. 2022 -2024ம் ஆண்டுகான இயக்குநர் சங்கத் தேர்தலில், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் புதுவசந்தம் அணியும் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் இமயம் அணியும் உக்கியமாக மோதுகின்றனர். இதனால், இயக்குநர் சங்கத் தேர்தலில் யார் யார் எந்த அணி என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், புது வசந்தம் அணியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். புது வந்தம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள், சுந்தர் சி, ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ்கண்ணா, வெங்கடேஷ், சரண், ரவிமரியா, திருமலை, நம்பிராஜன் நம்பி, ஆர்.கே. கண்ணன், முத்துவடுகு, ரமேஷ் பிரபாகரன், க்ளாரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதே போல, இமயம் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு, இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஜெகதீசன், ஜெனிஃபர் ஜூலியட், கமலக்கண்ணன் என்கிற விருமாண்டி, ராஜா கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், பாலசேகரன், கே.பி.ஜெகன், நாகேந்திரன், கே.பி.பி. நவீன், பாண்டியராஜன், பிரபாகர், சசி, சிபி, ஸ்டேன்லி, சாய் ரமணி வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இயக்குநர்கள் சங்கத் தேர்தலை இயக்குநர்கள் புதுவசந்தம் அணி இமயம் அணி என்று பிரிந்து எதிர்கொள்ள உள்ள நிலையில், புதுவசந்தம் அணியின் தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் இமயம் அணியின் தலைவர் பாக்யராஜும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு உக்கிரமாக மோதி வருகின்றனர்.
இயக்குநர் சங்க தேர்தலுக்கான இமயம் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், “புது முக இயக்குனர் கதைகளை தயாரிக்கும் உதவியை சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம். தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது.
தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம்.
என்னுடைய நோக்கம் எல்லாம் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த தேர்தலில் நான் நின்றால் இவ்வளவு நாள் எடுத்த பெயர் எல்லாம் போய்விடும் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், எதாவது இருந்தாதான் பயப்பட வேண்டும் எனக்கு வெட்கம் மானம் சூடு சுரணை எதுவும் இல்லை.
இதுவரை தலைவராக இருந்த ஆர்.கே.செல்வமணி எல்லாம் நன்கு சம்பாதித்து, ஆண்டு அனுபவித்து விட்டார்கள். நான் தேர்தலில் நிற்பது செல்வமணிக்கு அவரை அறியாமல் அவருக்கு ஒரு பயம் வந்துவிட்டது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய பாக்யராஜ், செல்வமணியை சுட்டிக்காட்டி, “நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால், அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் வந்து விட்டது. எனக்கும் செல்வமணிக்கும் முதல் விரிசல் எப்போது வந்தது என்றால், சர்க்கார் படக் கதை விவகாரத்தில், செல்வமணி, இரண்டு கதைகளும் வேற வேற, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குணு சொன்னார். ஆனால் நான் அந்த பேப்பரை தட்டி விட்டேன். தப்பு செய்யலாம். ஆனால் திட்டமிட்டு செய்வது கிரிமினல் வேலை. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கே.பாக்யராஜ் செல்வமணியை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜுக்கு பதிலடி கொடுத்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி வீடியொ வெளியிட்டுள்ளார். அதில், “நான் என் வாழ்க்கையில மிக மிக நேர்மையானவன். என்னோட மிகப்பெரிய சொத்தே நேர்மையும், சுயஒழுக்கமும்தான். நான் பேசாத ஒரு விஷயத்தை பேசினதாகச் சொல்லி அதை நம்ப வைக்கும் முயற்சியில் பாக்யராஜ் ஈடுபடுகிறார். கொஞ்சம் பேர் என்னை அநாகரிகமாக, அபாண்டமாக விமர்சனம் பண்ணனும்னு நினைக்கறாங்க. இவர் அதை நாகரிகமா சொல்லியிருக்கார்.
பாக்யராஜ் சார் உங்ககிட்ட ஒண்ணு சொல்கிறேன். இது தேர்தல் தயவு செய்து உண்மையைப் பேசி ஜெயிக்க முயற்சி பண்ணுங்கனு சொல்லிக்கறேன். நான் இந்த பதவியை அவர்கிட்ட ஒப்படைச்சா நீங்க தொழிலாளர் துறைக்கோ, கமிஷனர் ஆபிஸுக்கோ போக மாட்டேன்னு சொல்றீங்க. உங்களுக்கு பதவி முக்கியம். அப்படித்தானே, தவறு நடந்ததா என்பது முக்கியமல்ல.. போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போகாம இருக்க நான் இந்த பதவியை உங்களுக்கு ஒப்படைக்கணும்.
இந்த பதவி என் முப்பாடன் சொத்தோ.. என் பாட்டன் சொத்தோ அல்ல. இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டான உரிமையான ஒரு சொத்து. ஒவ்வொரு உறுப்பினரும் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது. நான் எப்படி இதை தீர்மானிக்க முடியும்.? எப்படி ஒப்படைக்கறது? அப்படி ஒப்படைச்சா நீங்க கமிஷனர் ஆபீஸ் போகமாட்டீங்கன்னா.. இதான் உங்க கேரக்டரா? நான் ரொம்ப பொறுமையாக சொல்கிறேன். உங்க மேல மரியாதை இருக்கு. 25 வருஷமா நான் இந்த சங்கத்துக்காக என் வாழ்க்கையை ஒப்படைச்சிருக்கிறேன். நீங்க ஒரு சிறு துரும்பக்கூட அசைக்காமல் இன்றைக்கு நீங்க குற்றசாட்டு சொல்றீங்க. இதை நான் ஒத்துக்க முடியாது. இதுபோல தவறான குற்றச்சாட்டு சொன்னீங்கன்னா.. உங்களை ஒரு போதும் மன்னிக்கமுடியாது. ஒரு போதும் பொறுத்துக்கொள்ளவும் முடியாது.” என்று கூறினார்.
இவ்வாறு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் புதுவசந்தம் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் இமயம் அணியின் தலைவர் பாக்யராஜ்ஜும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து உக்கிரமாக மோதி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil