ரஷ்யா-உக்ரைன் விவகாரமானது எப்போது வேட்மண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இருப்பதாக அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், கடந்த திங்கள்கிழமை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசுகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். இது உக்ரைனில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாக்ஸர் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் உக்ரைனுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான இந்த படங்களில், உக்ரைனிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், தெற்கு பெலாரஸில் உள்ள விமான நிலையத்தில், 100-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் மற்றும் ராணுவ கூடாரங்களை ரஷ்யா அமைத்திருப்பது பதிவாகியுள்ளது. மேலும், ரஷ்ய படையானது, ரஷ்யாவின் மேற்கு பகுதியில் இருந்த பெரிய வனப்பகுதியை அழித்துவிட்டு புதிய ராணுவத் தள மருத்துவமனையை அமைத்துள்ளது. இந்த மருத்துவமனையானது உக்ரைனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலே அமைந்துள்ளது என அந்தப் படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உக்ரைன் மீதான போரை தங்கள் நாடு விரும்பவில்லை என ரஷ்யா கூறிக்கொண்டே இருந்தாலும், ஒருபுறம் உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா சத்தமே இல்லாமல் குவித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிவருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த விவகாரத்தில் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன.