உக்ரைனில் செயல்பட்டு வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகளுக்கு உதவியாக படைகளை அனுப்பிய ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது ஜப்பானும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனை நோக்கிய ரஷ்யாவின் நகர்வுகள் அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விதிகளை மீறும் செயல் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
அவர் அறிவித்துள்ளதன்படி, ரஷ்ய கடன்பத்திரங்களை ஜப்பானுக்குள் விநியோகிக்கவும், ஜப்பானுக்கு ரஷ்யர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யர்கள் சிலரின் சொத்துக்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
உக்ரைனை நோக்கிய நகர்வுகளை கைவிட்டு ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தால் மட்டுமே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என கிஷிடா தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை ஜப்பான் இறக்குமதி செய்து வரும் சூழலில், போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் தற்போதைக்கு பொதுமக்களுக்கோ, தொழில் நிறுவனங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபரின் உத்தரவை கண்டித்து ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன.