ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 7- 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து மேற்குப் பாதை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதால், விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என்றும் கருதப்படுகிறது.
2020-ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை உருவானது. விமானப் போக்குவரத்து உள்பட அனைத்துப் போக்குவரத்துகளுக்கும் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மீதான தேவை குறைந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை மைனஸில் வர்த்தகமானது.
அன்றிலிருந்து இன்றுவரை கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக சீரடையாத நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால், சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான விலை அதிகரித்து வருகிறது. அதாவது, கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையின் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31-ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 98 டாலரில் வர்த்தகமாகிறது.
டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும் என இத்துறை சார்ந்த வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எதிர் வரும் நாட்களில் கச்சா எண்ணெயின் விலை 150 டாலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது என ஜே.பி.மார்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும் என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருக்கிறதா என கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.
“எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பும் அதிகம். ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி தடைபடும் என்கிற பதற்றம் உருவாகியிருக்கிறது. தற்போதைய கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு மிக முக்கியமான காரணம் இதுதான்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டால், அது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் உருவாகும் போது, நிச்சயமாக டிமாண்டு அதிகரிக்கும். டிமாண்டு அதிகரிக்கும் போது ஆட்டோமேட்டிக்காக விலை உயரும் என்பது வழக்கமான பிசினஸ் நியதிதான்.
மேலும், 2020-ம் ஆண்டில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது கச்சா எண்ணெய்யின் விலை பெரும் சரிவை சந்தித்து மைனஸ் விலையில் வர்த்தகமானது. அப்போது அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டன. பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகளை முழுவதுமாக மூடின.
ஏனெனில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு குறைந்தபட்சம் 60 டாலர் கிடைத்தால்தான் அந்த நிறுவனத்தால் லாபம் பார்க்க முடியும். அதற்கு கீழாக 40 டாலர், 30 டாலர் என குறையும்போது கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதற்கான செலவுக்குக்கூட அது போதாது என்பதால், எண்ணெய் கிணறுகளைக் குறைக்கும் நிலைக்கும், மூடும் நிலைக்கும் பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அப்படியான நிறுவனங்கள் தற்போதைய விலை உயர்வை காரணமாக வைத்து, லாபம் பார்க்கும் நோக்கத்தில் மூடிய ஆலைகளை திறந்து எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறைந்தால் ஒழிய, கச்சா எண்ணெய் விலை இப்போது குறையுமா என்பது மிகப் பெரிய கேள்வி” என்று பேசி முடித்தார் அவர்.
இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை, இந்திய அரசாங்கம் எப்படி அணுகுகிறது, இந்த போர் பதற்றத்தை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதில்தான் பெட்ரோல், டீசல் மீதான விலை ஏற்றம் இந்தியாவில் அதிகரிக்குமா அல்லது தற்போதைய விலையிலேயே தொடருமா என்பதெல்லாம் அடங்கியிருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கேற்ப உள்ளூரிலும் விலையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது எண்ணெய் நிறுவனங்களின் வழக்கம். இந்த நடைமுறையை ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது மத்திய அரசு.
வருகிற மார்ச் 10-ம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகும். அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசாங்கம் உயர்த்தத் தொடங்கும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலர் இருந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. தற்போது 100 டாலருக்கு மேல் கச்சா எண்ணெய் செல்லும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புண்டு என்றே பலரும் அஞ்சுகிறார்கள்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும்பட்சத்தில், பல பொருள்களின் விலையும் உயரும். இதனால் மக்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதைத் தடுக்க ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும். இந்த வட்டி அதிகரிப்பு தொழில் நிறுவனங்களை பாதிக்கும்.
ஆக, கச்சா எண்ணெய் விலை உயர்வால் அடுத்துவரும் சில மாதங்கள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். இந்த சிக்கல்களை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம்!