புதுடெல்லி,
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசர கூட்டத்தை கூட்டியது. அங்கு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, அனைத்து தரப்பிலிருந்தும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக இந்தியாவிற்கான ரஷ்ய நாட்டின் துணைத் தூதரகத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் ஊடக சந்திப்பில் பேசும் போது,
“இந்தியா ஒரு பொறுப்பான உலகளாவிய சக்தியாக ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது, மேலும் அது வெளிநாட்டு விவகாரங்களில் சுதந்திரமான மற்றும் சமநிலையான அணுகுமுறையை கையாள்கிறது. ஜ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் கருத்துக்கள் ரஷ்யா-இந்தியா கூட்டு வலுவான மற்றும் உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
மேலும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைன் மீதான நடவடிக்கைக்காக, ரஷ்யா மீது கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இன்று பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.