கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா தனது படைகளின் ஒரு பகுதியினை திரும்பப்பெற்றதாக அறிவித்திருந்தது. ஆனால், உக்ரைன் எல்லையில் முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிக ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளதாக பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் போர் பதட்டமும் அதிதீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புதின், பிரிந்து சென்ற டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசு மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி ரஷ்ய மொழி பேசும் இரண்டு குடியரசுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக மாஸ்கோ உறுதியளித்தது.
இதனால் உக்ரைனில் முன்பை விட தற்போது மோசமான பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், கனடாவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக கனேடிய ஆயுதப் படைகளின் 460 உறுப்பினர்களை கிழக்கு ஐரோப்பாவில் ஆபரேஷன் ரீஷூரன்ஸ்க்கு அனுப்புவதற்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.