லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4 ஆம் கட்ட தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, செய்தியாளர்களை சந்தித்து சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக பேட்டி அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிட்டாலும், அதன் தலைவர் மாயாவதி எந்த தொகுதியிலும் போட்டி இடவில்லை. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட தேர்தலில் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் மாயாவதி காலையிலேயே வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். சமாஜ்வாடி கட்சி மீது இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சமாஜ்வாடிக்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சியினர் என்றாலே குண்டர்கள் என்றும், மாஃபியாக்கள் என்றும் தெரிவித்த அவர், சமாஜ்வாடி ஆட்சியில் மாநிலத்தில் வன்முறைகள் அதிகம் நடைபெற்றதாக தெரிவித்தார். உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் மாயாவதி குறிப்பிட்டார்.