பெங்களூரு
டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்த பதிவு கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையொட்டி பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையொட்டி நடிகர் சேத்தன் குமார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சேத்தன் குமாரின் மனைவி மேகா தனது முகநூல் பக்கத்தில் தனது கணவர் சேத்தன் குமாரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாகப் பதிவிட்டுள்ளார். இது கர்நாடக மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்துக் காவல் ஆணையர் கமல் பந்த்,
“சேத்தன் குமார் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். தனிப்படை காவலர்கள் அவரிடம் விசாரணை செய்கின்றனர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சேத்தன் குமாரைக் கைது செய்வது குறித்து விசாரணைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்”
என தெரிவித்துள்ளார்.