புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ’ஒமைக்ரான் சத்தமில்லாமல் கொல்லும் கிருமி’ என்று விமர்சித்தார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங். இவர் உச்ச நீதிமன்ற பார் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முழு வீச்சில் நேரடி விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஒமைக்ரான் ஒரு சைலன்ட் கில்லர். எனக்கு கரோனா முதல் அலையின் போதும் தொற்று ஏற்பட்டது. ஆனால் அப்போது 4 நாட்களில் குணமடைந்துவிட்டேன். இந்த முறை 25 நாட்களைக் கடந்தும் நான் இன்னும் வருந்திக் கொண்டு இருக்கிறேன். இன்று 15,000-க்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது” என்றார்.
அதற்கு விகாஸ் சிங், “ஒமைக்ரான் மிதமான வைரஸ். இங்கு எல்லோருக்கும் குணமாகிறது. இந்த விஷயத்தில் நீங்கள் துரதிர்ஷ்டசாலி” என்றார். அதற்கு நீதிபதி “பார்ப்போம்” என்று கூறினார்.
கடந்த ஜனவரி மாதம், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டபோது 10 நீதிபதிகளுக்கு தொற்று உறுதியானது. அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் விசாரணை நடக்கத் தொடங்கின. தற்போது வாரத்தில் இரண்டு முறை நேரடி விசாரணையும் மற்ற நாட்களில் ஆன்லைனிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய கரோனா நிலவரம்:
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,28,67,031.
* கடந்த 24 மணி நேரத்தில் 31,377 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை:4,21,89,887
* கடந்த 24 மணி நேரத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,12,622.
* இதுவரை நாடு முழுவதும் 176.19 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.