புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 110 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உக்ரைனில் ரஷியாவால் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. அதாவது நேற்று கச்சா எண்ணெய் விலை 99.38 டாலராக இருந்தது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பிரெக்சிட் பிரச்சினை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதிகரித்தது. அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி கச்சா எண்ணெய் விலை 82.74 அமெரிக்க டாலராக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.110.04 ஆகவும், டீசல் விலை ரூ.98.42 ஆகவும் இருந்தது. அதன் பிறகு இந்த மாதம் மட்டும் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா முதல் அலையின்போது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் ஜூன் மாதம் 6-ந் தேதி வரை 82 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் பிறகு தற்போது 110 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
உலக அளவில் ரஷியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 10 சதவீதமாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி ஐரோப்பாவில் 3-ல் ஒரு பங்காகவும் உள்ளது. இந்த இயற்கை எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தியாவை பொருத்தவரை 2021-ம் ஆண்டு தினமும் 43 ஆயிரத்து 400 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது மொத்த இறக்குமதியில் 10 சதவீதம் ஆகும். இதேபோல் 2021-ம் ஆண்டு 1.8 மில்லியன் டன் நிலக்கரியும் (1.3 சதவீதம்) 2.5 மில்லியன் டன் எல்.என்.ஜி. (இயற்கை திரவ எரிவாயு)வும் ரஷியாவிடம் இருந்து இறக்குமதியானது.
தற்போது ரஷியாவில் அதிகரித்துள்ள பதட்டத்தால் கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.