நூறாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், திரைப்பட உருவாக்க ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திரையரங்கத்தின் திரைகள் ஆயிரக்கணக்கான படங்களை, நூற்றுக்கணக்கான நடிகர்களைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. சில படைப்புகளும், சில நடிகர்களும் திரையோடில்லாமல், மக்களின் வாழ்வோடும் கலந்திடும் விந்தை அவ்வப்போது நிகழ்கிறது.
வழமையான கதைகள், ஒன்றாத காட்சியமைப்புகள் என படைப்புலகமும் மக்களும் சோர்வாகும்போது கலை மீதான நம்பிக்கையைத் தளரவிடாதிருக்க ஒரு படைப்பு வெளியாகும். அந்தப் படைப்பு ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைந்துநிற்கும். 2007 அப்படியானதொரு வருடம். தமிழ் சினிமா தன் எல்லையை விஸ்தரிக்க, தான் சொல்லவேண்டிய கதையை, சொல்ல மறந்த மனிதர்களின் வாழ்வை நினைவூட்ட வெளியானது `பருத்திவீரன்’ திரைப்படம். அந்தப் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன.
சினிமாவின் கூறுகள் குறித்து அலசும் விமர்சகர்கள்; கதையின் தன்மை, படைப்பாக்கம் குறித்து ஆராயும் ஆய்வாளர்கள்; சுவாரஸ்யம், கொண்டாட்டம் மட்டுமே பிரதானமென படம் பார்க்கும் பொதுமக்கள் அனைவராலும் சிலாகிக்கப்பட்ட படம். ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, தொடங்கி ‘புஷ்பா’ வரை என மக்கள் கொண்டாடிய பல படங்களுக்கு ‘பருத்திவீரன்’ ஏதோவொரு வகையில் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. பருத்திவீரன், செவ்வாழை, முத்தழகு என கதாபாத்திரங்களின் பெயர்கள் தம் உறவுகளின் பெயரென மக்களிடம் பதிந்துபோயின.
அமீர் என்கிற திரையாளுமை நிகழ்த்திய ஒப்பற்ற படைப்பாக்கம். இன்றளவும் அந்தப் படத்தின் ஸ்திரத்தன்மை நீங்கவேயில்லை. பம்பையும், உருமியும் இசைக்க, பறையின் சன்னதத்தில், பாண வேட்டுகள் விண்ணதிர `பருத்திவீரன்’ கார்த்தி நமக்கு அறிமுகமானார். தன் நடிப்பால் நம் மக்களுக்கு நெருக்கமானார். பொதுவாக, ‘பருத்திவீரன்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அறிமுகமான முதல் படத்திலேயே ஒருவர் இத்தனை அசாத்திய நடிப்பை எப்படி வெளிப்படுத்தினார் என்பர். உண்மையில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தங்களை முழுமையாக நிரூபித்தவர்கள், அந்த வாய்ப்புக்காகத்தான் பல வருடங்களாத் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்திருப்பர். கற்றுத்தேர்ந்த நுட்பங்களைக் கிடைத்த வாய்ப்பில் சரியாக வெளிப்படுத்தியிருப்பார் கார்த்தி.
சினிமா குறித்து, குறிப்பாக தமிழ் சினிமா, அதன் வியாபாரப் போக்கு, திரைக்கதை உத்தி, புதுமையான கதைக் களத்தை விரும்பும் பார்வையாளர்கள், திரையரங்கத்தைத் திருவிழாகோலமாக்கும் தன்மை என அனைத்தையும் கச்சிதமாக அறிந்த ஒருவர்; அதற்காக தன்னைத் தயார்படுத்திக்கொண்டவரும்கூட. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த அனுபவம், ஓர் இயக்குநரின் நடிகராகத் தன்னை லாகவமாக வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் அவருக்கு வாய்த்திருக்கிறது. 2000-க்குப் பிறகு நடிகராகக் களமிறங்கியவர்களில் வணிக ரீதியான சினிமாக்கள், ஆழமான கதையம்சம் கொண்ட படங்கள் இரண்டிலும் நடித்து, வெற்றியும் பெற்றவராகத் தனித்துநிற்பவர் கார்த்தி.
15 வருடங்களில் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். அனைத்திலும் வித்தியாசமான பாத்திரங்கள். அழுத்தமான கதை, அதே சமயம் வணிக ரீதியாகவும் வெற்றி என களமிறங்கும் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக கார்த்தி இருப்பதன் காரணம் அவரின் பங்களிப்பு. அவர் தேர்வு செய்யும் படத்தில் கதையின் நாயகனாக கார்த்தி நடித்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கும். ‘பருத்திவீர’னில் அவருக்கு இணையாக நாயகியின் பாத்திரம், செவ்வாழையாக நடித்த சரவணன், பொன்வண்ணன் கதாபாத்திரம் இவை அனைத்துமே அழுத்தமான கதாபாத்திரங்கள். பலரும் கார்த்திக்கு முன்பே நடிக்கத் தொடங்கியவர்கள். ஆனாலும், அத்தனை காட்சிகளிலும் துளியும் பிசிறு தட்டாத நடிப்பு.
திருவிழா கொண்டாட்டத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் கோலாகலமாக ஆடிக் கொண்டே அறிமுகமாகும் மூர்க்கமான நாயகன், திக்கற்று திரிந்து, காதலியின் காதலை உணர்ந்து, அவளுக்காகவே இந்த வாழ்வென முடிவுசெய்து, மனிதனின் சாதியப் பெருமிதத்துக்கு பலியாகி, அரை நிர்வாணமாகச் சரிந்து மாயும் இறுதிக் காட்சி வரை அவரின் திரை ஆதிக்கம் பிரமிப்பானது.
மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல நடிகர்களின் தேர்வும் மாஸ் கமர்சியல் சினிமாவாகத்தான் இருக்கும். முதல் படம் அப்படியான வெற்றி. ஆனால், இரண்டாம் படமான `ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு புதுமையான முயற்சி. அந்தப் படத்திலும் பார்த்திபன், ரீமா சென் என உடனிருக்கும் பல கதாபாத்திரங்கள் வலிமையான பாத்திரங்கள். ஆனால், தனக்கான நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருப்பார். விளிம்பு நிலை தொழிலாளியாக பட படவென பேசிக் கொண்டும், `எங்களையெல்லாம் இப்படி கூட்டிட்டு வந்து கொல்றதுக்கு உங்களுக்கு என்னங்க ரைட்ஸ் இருக்கு’ என இயலாமையில் கதறி, பயந்து உழலும் பாத்திரம், பிற்பாதியில் சோழத் தூதுவனான பின்பு தீர்க்கமான பார்வையுடன் கூடிய உடல் மொழியென மாறியிருக்கும்.
`மெட்ராஸ்’ படத்திலும் கலையரசன், ஜானி, வினோத், கேத்ரீன் தெரசா என பல கதாபாத்திரங்களுக்குமிடையே பல இடங்களில் `அண்டர் ப்ளே’ செய்திருப்பார். கொண்டாட்டமான இளைஞனாகத் தோன்றி, தான் செய்த தவற்றால் நண்பன் இறந்த குற்றவுணர்ச்சியில் காதலியையும் வெறுத்து நின்று, இறுதியில் அரசியல் சூழ்ச்சியறிந்து சுவரை தன் நிழலால் மீறி நின்று விளையாடியிருப்பார்.
`நான் மகான் அல்ல’ படம்தான் கார்த்தி தனக்குள்ளிருக்கும் இயல்பான நடிப்பைக் கச்சிதமாக வெளிகாட்டிய படம். பெரு நகரத்தில் வாழ்கிற சராசரி shine பைக் மிடில் கிளாஸ் இளைஞன். இதற்கு முன்பும் பல கதாநாயகர்கள் ஏற்ற பாத்திரம். ஆண் நண்பர்கள் சூழ் கேங்கில் இருக்கும் ஒற்றைத் தோழியிடம் பணம் கேட்பது, அவள் தோழியைக் காதலிப்பது, காதலியின் காசில் `அதிக விலைக்கு’ டிரெஸ் எடுப்பது, தங்கையுடன் செல்லமான சண்டை என யதார்த்தமான நடிப்பால் பலருக்குமான பிடித்த பட்டியலில் சேர்ந்தது அந்தப் படம். `தோழா’ படமும் ஒரு பெரிய நடிகரின் உடனிருக்கும் கதாபாத்திரம்தான். குறும்பான பலருக்கும் எளிதில் பிடித்துப் போகிற அந்த இளைஞனாக வசீகரித்திருப்பார்.
80-களில் கமர்சியல் சினிமாக்கள் பலவற்றிலும் உச்ச நட்சத்திரங்கள் பலரும் நகைச்சுவை காட்சிகள் கொண்ட படங்களில் நடித்தனர். பிறகு ஆக்ஷன் ஹீரோ பிம்பம் வந்தபிறகு அந்தப் போக்கு குறைந்தது. பலருக்கும் அதன்பிறகு அது கைகூடவுமில்லை. கார்த்தி அதை எளிமையாகக் கையாண்டார். மீசை முறுக்கும் போலீஸாகவும், ரகளையான திருடனாகவும் ஒரே படத்தில் அவரால் வெரைட்டி காட்ட முடிந்திருக்கிறது.
பொறுப்பான தீரனாகவும், காஷ்மோரா `ராஜ் நாயக்’ ஆகவும் அவரது நடிப்பால் தான் ஏற்கும் பாத்திரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். தன் திறமையின்மீது நம்பிக்கை கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியப்படும். பாடல்களே இல்லாத ஓரிரவில் நடக்கும் `கைதி’ கதை, பக்கா கமர்ஷியல் படமான `கடைக்குட்டி சிங்கம்’ கதை என இரண்டு முற்றிலும் வெவ்வேறான படங்களை நடித்து வெற்றியடைச் செய்யும் ஆற்றல் கார்த்தியின் பலம்.
கிராமத்து முரட்டு இளைஞன், வடசென்னையின் உதிரித் தொழிலாளி, ஆர்பாட்டமில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், பணக்கார இளைஞன், லோக்கல் திருடன், ஹாரர் பட வில்லன், நேர்மையான போலீஸ் அதிகாரி என 20 படங்களில் அத்தனை வெரைட்டியான நடிப்பு. வெவ்வேறு கதைக்களங்கள். கமர்ஷியல் வெற்றிப் பெற்ற நடிகர்கள் பலருமே கதையம்சமுள்ள படத்தில் நடிப்பதைப் பகுதி நேரமாகவும், மசாலா கமர்ஷியல் படத்தில் நடிப்பதை முழுநேரமாகவும் கொண்டிருப்பர். ஆனால், கார்த்தி கொஞ்சம் வித்தியாசமாக கதையம்சமுள்ள படத்தில் நடிப்பதை முழுநேரமாகவும், மசாலா கமர்சியல் படத்தில் நடிப்பதை பகுதி நேரமாகவும் வைத்திருக்கிறார். ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ என அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பிலுமே அவை வெரைட்டியான படங்கள் எனத் தெரிகிறது.
திரைக்கலைஞராக மட்டுமன்றி சமூகத்திற்கான குரலாகவும் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். வேளாண் சட்டங்கள் வந்தபோது அதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது, Lysosomal storage disease என்ற அரிய கூட்டு நோய் வகைமைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரதிநிதியாகச் செயல்படுவது என சமூகப் பொறுப்பும் கொண்ட நடிகராக மிளிர்கிறார்.
‘பருத்திவீரன்’ வெளியான காலகட்டம் ஓடிடி, சமூக வலைதளம் எனத் தற்போதைய வளர்ச்சியில்லை. தற்போது பல புதிய களங்களும், புதிய திரைக்கதை முயற்சிகளும் சாத்தியமாகத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு ஏதோவொரு வகையில் கார்த்தியின் சில படங்களும் முன்மாதிரியானவை. சுவாரஸ்யமான திரைக்கதையில் அழுத்தமாக கதைகளைச் சொல்லும் காலம் இது. அதற்கு கதையின் போக்குக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் நடிகர்களின் பங்களிப்பு அவசியம். கார்த்தி அப்படியான கலைஞன்!
வாழ்த்துகள் வீரா…!