புதுச்சேரியில், காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதோடு, பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19ம் தேதி தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன் சென்ற வாகனங்களின் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை பெண் காவலர் ஜீவிதா, காரை மடக்கிப்பிடித்து காரில் இருந்தவனை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
காரை ஓட்டி வந்த அந்த நபர், கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் நிறுத்தாமல் தப்பியோடுவதற்காக கடலூர் நோக்கி வேகமாக சென்றதால், பெண் காவலர் காரை நிறுத்துமாறு கூறிய போது அவன் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் லேசான காயமடைந்த பெண் காவலர் ஸ்டியரிங்கை திருப்பி சாலை ஓரத்தில் காரை நிற்கச் செய்து கீழே இறங்கியவுடன், அந்த நபர் காரில் தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.