கோட்டையை பறிகொடுத்த அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள்: எந்தெந்த மாவட்டங்களில் வீழ்ச்சி?

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை, இங்கே திமுகவின் கொடி பறக்காது என்று கூறிய அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஸ்வீப் வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டைகளில் திமுக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், அதிமுகவில் முக்கிய அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் கோவை மாட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதே போல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில், திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே போல, தருமபுரி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது. ஆட்சியைப் பிடித்தாலும், கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது. கோவை, சேலம் மாவட்டத்தில் திமுக தோல்வியைத் தழுவியதால் இந்த மாவட்டங்களை அதிமுகவின் கோட்டை என்று அதிமுகவினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போதே, திமுக தலைமை கோவையையும் சேலத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று குறி வைத்தது. திமுகவில் பிரம்மாண்ட மாநாடுகளுக்கு பேர் போன கே.என்.நேருவை சேலத்துக்கும், கோவைக்கு செந்தில் பாலாஜியையும் நியமித்து தேர்தல் ஸ்கெட்ச் போட்டது திமுக தலைமை. அதற்கான பலனாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கோவை, சேலம் மாவட்டங்களில் கோவை மாநகராட்சி, சேலம் மாநகராட்சிகளையும் நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.

சேலமும் கோவையும் அதிமுகவின் கோட்டையாகக் கூறிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திகைத்துப்போயுள்ளனர். கோவை மாநகராட்சியில் அதிமுக வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, சேலத்தில் எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும், அதிமுகவில் போட்டியிட்ட விஐபிகள் சிலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதே போல, கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாநகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது.

தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய மாநகாட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாவட்டத்தை எஸ்.பி.வேலுமணியும் சேலம் மாவட்டத்தை இ.பி.எஸ்.-ம், ஈரோடு மாவட்டத்தை செங்கோட்டையனும், தருமபுரியை பாமகவும் பறிகொடுத்துள்ளது. அதிமுக அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சிகள், நகராட்சிகளை திமுகவிடம் இழந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.