நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், அமைச்சருமான நவாப் மாலிக், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக இன்று அமலாக்கத்துறையினர் அவரை வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்தனர்.
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நவாப் மாலிக் ஒத்துழைக்காததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவாப் மாலிக்கின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.