டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதி சிறத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு இவ்விரு பிரச்சனைகளும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், எனவே ஒழுங்காற்று அமைப்புகள் நிதித்துறையில் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். தேசிய பங்குசந்தையில் நடந்த குளறுபடிகளை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக கூறினார். எல்.ஐ.சி. பொதுப்பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிந்தவுடன் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99.38 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை 99 டாலராக உயர்ந்தது. அதற்கு பின்பு தற்போது தான் 100 டாலரை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.