நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை, அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் இன்று மீண்டும் கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், அவரை மார்ச் 9 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை செய்த நீதிமன்றம், அவரின் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.