சினிமாவில் 15 ஆண்டுகள்… பெரிய நன்றி சொல்லும் கார்த்தி
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு வாரிசு நடிகர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்தி தான் அவர்கள்.
அண்ணன் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த போது தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்தி. மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் நடித்த 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதற்குப் பிறகு 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வெளிவந்த 'பருத்திவீரன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இன்றுடன் இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. விதவிததமான கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்த கதாநாயகர்களில் கார்த்தியும் இடம் பிடித்தார். அதன்பிறகு கடந்த 15 வருடங்களில் 20 படங்களில் நடித்துள்ளார். இது மற்ற கதாநாயகர்கடன் ஒப்பிடும் போது குறைவுதான். முதல் படத்தில் நடித்து முடித்தபின் அவரது இரண்டாவது படம் வெளிவர மூன்று ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இரண்டாவது படமாக வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' அப்போது வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதும் பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது.
அதற்கடுத்து 'பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அதன்பின் வெளிவந்த 'சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி' என மிகச்சுமாரான படங்களில் நடித்திருந்தாலும் 'சகுனி, அழகுராஜா' படங்கள் இப்போது டிவியில் ஒளிபரப்பானால் அதன் நகைச்சுவைக்காக அதிகம் ரசிக்கப்படுகின்றன.
இருப்பினும் அடுத்து வெளிவந்த 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தன்னை மீட்டெடுத்தார் கார்த்தி. 'கொம்பன், தோழா' படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. மீண்டும் ஒரு சிறு பின்னடைவு 'காஷ்மோரா, காற்று வெளியிடை' படங்கள் மூலம் வந்தது. அவற்றை 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் சரி செய்தார். அதற்கடுத்து வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் அவரை தங்களது குடும்பத்தில் ஒருவராக ரசிகர்களிடம் சென்று சேர வைத்தது. 'தேவ்' படம் தேவையற்ற ஒரு படம் என விமர்சகர்கள் சொன்னாலும் 'கைதி' படத்தின் மூலம் மீண்டும் தன்னை காப்பாற்றிக் கொண்டார். பின்னர் வந்த 'தம்பி' படம் தடுமாறினாலும் 'சுல்தான்' மூலம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார்.
தற்போது 'விருமன், சர்தார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
15 ஆண்டுகளில் கதாநாயகனாக 20 படங்கள்தான் என்பத ஆச்சரியமான ஒன்று என்றாலும் திரையுலக வட்டாரங்களில் விசாரித்த போது தன்னுடைய சம்பளத்தை அதிகமாக உயர்த்தாத ஒரே ஹீரோ என திரையுலகினர் சொல்கிறார்கள். அவரைத் தேடி பல வாய்ப்புகள் சென்றாலும் எல்லாவற்றிலும் நடிக்காமல் தேர்வு செய்து நடிக்கிறார் என்பது உண்மை.
'பருத்தி வீரன்' படத்தில் எப்படி பார்த்தோமோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார் என்பது இயக்குனர்களின் பார்வை. 'பையா, மெட்ராஸ், தோழா, கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களின் கார்த்திதான் தங்களுக்குப் பிடிக்கிறது என்பது ரசிகர்களின் பார்வை. அதே சமயம் 'சிறுத்தை' போன்ற அதிரடி ஆக்ஷனிலும் அவர் தொடர வேண்டும் என்றும் சொல்கிறார்கள். 'பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவன் வந்த பிறகு கார்த்தி வேறு ஒரு தளத்திற்குச் செல்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தன்னுடைய 15 வருடத் திரையுலகப் பயணித்திற்கு பெரிய நன்றி சொல்லி இருக்கிறார் கார்த்தி. “பருத்திவீரன்' படம் மூலம் என்னுடைய நடிப்புப் பயணம் ஆரம்பமானது அசீர்வாதம் என நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சார் டிசைன் செய்த கற்பித்த ஒன்று, அவருக்குத்தான் மொத்த பெருமையும் சேரும். அதன் பிறகு பல பாடங்கள் கற்றாலும், அவர் எனக்குக் கற்றுத் தந்தது, என்னை மூழ்க வைத்து, நான் செய்வதை ரசிக்க வைத்தது என்பதை புதையலாக நினைக்கிறேன். இந்த அற்புதமான பாதையை ஏற்படுத்தித் தந்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என்னுடைய அன்பான ரசிகர்கள், மீடியா ஆகியோருக்கு நன்றி,” எனக் கூறியுள்ளார்.