சிவகங்கை: நகராட்சித் தலைவர் ரிமோட் பாம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை!

15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே அதிரவைத்த சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில், இன்று குற்றவாளிகளை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கொலை

தி.மு.க உட்கட்சி பிரச்னையால் 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில், கட்சித்தலைமை முருகன் என்பவருக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், பெரும்பாலான தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவில் முருகன் நகராட்சித் தலைவரானார். இதனால் சிவகங்கை நகர தி.மு.க-வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் 29-ல் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்திலிருந்து தன் ஸ்கார்பியோ காரில் வீட்டுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த ரிமோட் பாம் வெடித்து முருகன் பலியானார். ஓட்டுநர் பாண்டிக்கு கால்கள் துண்டானது.

முருகன்

பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்தச் சம்பவத்தை கண்டித்து சிவகங்கையில் அப்போது போராட்டங்கள் நடந்தன.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் மணிமுத்து, மந்தக்காளை, பாலா, சரவணன், மாமுண்டி(எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகப்பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பு உட்பட 139 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே முக்கிய குற்றவாளிகளான பாலா, முருகபாண்டி இருவரும் உயிரிழந்ததுடன் வீரபாண்டி என்பவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கொலை

கடந்த 15 வருடங்களாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யபடுவதாக இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.