சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர்.
கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் அமைப்புக்கு நிதி உதவி வழங்கி இருப்பதாக ‘சுவிஸ் ரசியங்கள்’ கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் ஆக்கிரமித்தபோது, அப்படையை வெளியேற்ற ஆப் கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்புக்கு சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் நிதி உதவிவழங்கின. இந்த நிதி உதவியானது கிரிடிட் சுவிஸ் வங்கியில் உள்ள அக்தர் அப்துர் ரஹ்மான் கான் தொடர்புடைய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. அவர் அந்தப் பணத்தை முஜாஹிதீன் அமைப்பினருக்கு வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,000-க்கு மேற்பட்ட கணக்கு
கிரிடிட் சுவிஸ் வங்கியில் 1940 முதல் 2010 வரையில் திறக்கப்பட்ட 18,000-க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் கணக்குகளில் மொத்தமாக 100 பில்லியன்டாலர் சொத்துகள் இருப்பதாகவும், அதில் பிரச்சினைக்குரிய பட்டியலில் உள்ள நபர்களின் கணக்குகளில் 8 பில்லியன் டாலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தக் கணக்குகளில் 600 கணக்குகள் 1400 பாகிஸ்தானியர்கள் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
வெளிநாடுகளில் பணம் பதுக்கி இருந்த நபர்களின் பட்டியல் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அதேபோல் 2017-ல்பாரடைஸ் பேப்பர்ஸ், 2016-ல் பனாமா பேப்பர்ஸ் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.