செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது பாத்திரம் கழுவும்படி கூறியதால் தாய் அடித்துக் கொலை: உ.பி-யில் 14 வயது மகள் ஆத்திரம்

நொய்டா: செல்போனில் பேசிக் கொண்டிருந்த மகளை பாத்திரம் கழுவும்படி கூறியதால், ஆவேசமடைந்த மகள் தனது தாயை அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் 34 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் ஏடிஜிபி ரன்விஜய் சிங் கூறுகையில், ‘கொலையான பெண்ணுக்கு 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர்கள் இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர். சம்பவ இடத்தில் இருந்து சடலம் கைப்பற்றப்பட்ட பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண்ணை கொன்றது அவரது மகள் என்பது தெரியவந்தது. ஆனால், அந்த சிறுமி போலீசை திசை திருப்பும் வகையில் தனது தாயை கொன்றுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். தொடர்ந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, தனது தாயை இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, தனது தாய் பாத்திரம் கழுவும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தாய், தனது மகளை திட்டியுள்ளார். அப்போது கோபமடைந்த மகள், தனது தாயின் தலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் தனது தாய் சரிந்து கிடப்பதை பார்த்து, வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். நாங்கள் சடலத்தை மீட்க சென்ற போது படுக்கையறையில் இருந்து குளியலறை வரை ரத்தம் பரவிக் கிடந்தது. சிறுமியின் தாய் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மற்றொரு கோணத்தில் விசாரணை நடத்திய போது, தனது தாயின் நடத்தையால் அந்த சிறுமி கோபமாக இருப்பதாகவும், தனது பிளாட்டுக்கு சில ஆண்கள் வந்து செல்வதால் கோபமுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாயுக்கும், மகளுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். தற்போது அந்த சிறுமியை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.