உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தான் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் திடீரென சரமாரியாக உக்கி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர் மேடையில் உக்கி போடும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் கடும் கோபத்தில் உள்ள மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவரும் போலி நாடகமே இது என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.
அந்த எம்எல்ஏவின் பெயர்
பூபேஷ் செளபே
. இவர் இவர் சோன்பஹ்தர் மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியிலிருந்து
பாஜக
சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதே தொகுதியில் மீண்டும் இவர் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த ஐந்து வருடமாக கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை போலும். இதனால் மக்கள் அதிருப்தியுடனும், கோபத்துடனும் இருப்பதை அறிந்து வித்தியாசமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தொகுதியில் ஒரு பிரசாரக் கூட்டத்தை இவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்டு செளபே பேசுகையில் திடீரென தான் அமர்ந்திருந்த சேரை விட்டு எழுந்து அந்த சேர் மீது ஏறி சரமாரியாக உக்கி போட ஆரம்பித்தார்.
கைகளால் காதுகளை மூடிக் கொண்டு அவர் உக்கி போட்டார். ஏன் இவர் இப்படி திடீரென உக்கி போடுகிறார் என்று மேடையில் இருந்த யாருக்கும் புரியவில்லை. சில தலைவர்கள் எழுந்து அவரிடம் போய், உட்காருப்பா போதும் போதும் என்று சமாதானப்படுத்தினர். ஆனாலும் செளபே விடவில்லை. உக்கி போட்டுக் கொண்டே இருந்தார்.
இதுகுறித்து செளபே கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இதனால்தான் உக்கி போட்டேன் என்று கூறியுள்ளார் செளபே. இவர் உக்கி போட்ட அந்த “ஸ்டண்ட்” வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.