தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா: விழிப்புணர்வு சுற்றுலா மூலம் கவனம் ஈர்க்கும் இஸ்லாமிய பெண்

திருவனந்தபுரம்: தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா என உணர்த்த தனிப் பயணம் மேற்கொண்டுள்ளார் இஸ்லாமியப் பெண் ஒருவர்.

இந்தியாவின் மாகே யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரபல பயண வலைப்பதிவர் நஜீரா நவுஷத் (33). தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பானது என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இதற்காக 50 நாட்கள் தனிச் சுற்றுலாவாக பயணம் செய்து வருகிறார்.

கடல்மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்வான கேரளாவின் குட்டநாடு பகுதியில் இருந்து, கடல் மட்டத்தில் இருந்து உயரமான நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் வரை இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் நஜீரா.

இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் நஜீரா கூறும்போது, “குட்டநாட்டில் உள்ள மான்கொம்பு பகுதியில் இருந்து கடந்த 9-ம் தேதி பயணத்தை தொடங்கினேன். எனது கணவர் ஓமன் நாட்டில் வேலைசெய்து வருகிறார். எனக்கு 5 குழந்தைகள். இதுபோன்ற பயணத்தின்போது எனது குழந்தைகளை அம்மாவின் வீட்டில் விட்டுவிடுவேன். பெண்கள் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பில்லை என்பதாகவே பொதுப்புரிதல் உள்ளது. ஆனால் அப்படியில்லை என்பதை நிரூபிக்கவே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணத்தைத் தொடங்கும்போதே ரயில், பேருந்து, விமானம் என எதையும் பயன்படுத்தக் கூடாதென தீர்க்கமாக முடிவெடுத்தேன். கிடைக்கும் வாகனங்களில் பயணித்து, பயண தூரத்தை அடைவது என தீர்மானித்தேன். அது லாரி தொடங்கி, சரக்கு வாகனமாக இருந்தாலும் இருக்கட்டும் என முடிவெடுத்தேன். இப்படியான பயணம் தான் பண்பட்ட மனிதரை உருவாக்கும். திட்டமிடப்படாத எந்தவொரு பயணமும் பல்வேறு வகை கலாச்சாரத்தையும் மனித மனங்களையும் நம்மை உணரச் செய்யும். இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறு மக்களின் உணவுக் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நிறைய சவால்கள் இருப்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் இந்தியாவில் தன்னிச்சையாக பெண்கள் பயணிப்பது பாதுகாப்பானது என்பதை உணர்த்தவே இந்தப் பயணம் மேற்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களுக்கு 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்தேன். அது தந்த உற்சாகமே இந்தப் பயணத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. இந்தப் பயணத்திற்கு என் கணவர் மற்றும் அம்மா மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து, ஊக்குவிக்கவும் செய்கின்றனர். இந்தப் பயணம் இலக்கை அடைய இன்னும் 15 நாட்கள் ஆகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.