தமிழகத்தில் சில நகராட்சி, பேருராட்சிகளில் திமுக, அதிமுக சம பலத்துடன் வெற்றி பெற்று இருப்பதால், அதன் நிர்வாகத்தை கைப்பற்றுவதில் சுயேச்சைகள் ஆதரவை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக அதிமுகவும் 11 இடங்களில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன. அங்கு சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் ஆதரவைப் பெறும் கட்சியே மணப்பாறை நகராட்சியை கைப்பற்றும் சூழல் இருக்கிறது.
அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சியில் திமுக, பாஜக தலா 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 3 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவை பெறும் கட்சி கணபதிபுரம் பேரூராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக, அதிமுக தலா 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களது ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் நகராட்சியில் அதிமுக, திமுக தலா 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அங்கு சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் நகராட்சி நிர்வாகத்தை கட்சிகள் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்ற இருக்கின்றனர்.