தமிழகத்தில் முக்கியமான மாநகராட்சிகளில் மேயர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் அவற்றில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், மதுரை, கோவை, ஈரோடு, வேலூர், கடலூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சிவகாசி என மொத்தம் 11 மாநகர மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை, தாம்பரம் ஆகிய இரு மாநகர மேயர் பதவிகளும் பட்டியலின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில், மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீதனி சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 111 வது வார்டில் இருந்து தேர்வான நந்தினி என்பவரின் பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட122 ஆவது வார்டைச் சேர்ந்த ஷீபாவின் பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வார்டில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்திருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட ஷீபா, பொதுத்தொகுதியில் இருந்து வெற்றிபெற்றிருந்தாலும், பட்டியலினத்தைச்சேர்ந்தவர் என்பதால் இவரது பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM