தேசிய பங்கு சந்தையில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக, அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை, சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த வாரம் கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.எஸ்.சி., எனப்படும் தேசிய பங்கு சந்தையில் 2013 – 16 வரையிலான காலகட்டத்தில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா, 59. இவரது பதவி காலத்தில், ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் பல்வேறு பாதுகாப்பு விதிமீறல்கள் நடைபெற்றது, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், தேசிய பங்கு சந்தையின், கணினிகளின் கட்டுப்பாட்டு நிலையமான, ‘சர்வர்’ மையத்தை, டில்லியை சேர்ந்த தனியார் பங்கு சந்தை வர்த்தக நிறுவனம் ஒன்று முறைகேடாக கையாண்டதும் தெரியவந்தது.அதோடு தேசிய பங்கு சந்தை ஊழலில் குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை, சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் மூன்று முறை விசாரணை நடத்தினர். அப்போது, பல கேள்விகளுக்கு அவர் மழுப்பலான பதில்களை அளித்ததாக கூறப்படுகிறது.மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவை வழிநடத்திய இமயமலை சாமியார் யார் என்பது குறித்தும் சி.பி.ஐ., அதிகாரிகள் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது.
‘சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே அவரிடம் இருந்து அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் பெற முடியும்’ என, சி.பி.ஐ., அதிகாரிகள் கருதுவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனந்த் சுப்ரமணியன் வீட்டில், ‘ரெய்டு’ நடந்துள்ளது. எனவே, இந்த வார கடைசியில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– புதுடில்லி நிருபர் –
Advertisement