2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது’ என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன்படி, திட்டமிட்ட தேதியான 2019, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஜூன் 23-ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24-ம் தேதி தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை தேர்தல் அதிகாரியாக நியமித்த உயர் நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்த கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஏற்கெனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க கோரியும் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும்; உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்; தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் ஆகிய உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மேல்முறையீடு வழக்குகள், மூன்று அமர்வுகளை கடந்து இறுதியாக, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து, 2021 அக்டோபர் 26 ம் தேதி, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று (பிப்ரவரி 23) நீதிபதிகள் தற்போது தீர்ப்பளித்து உள்ளனர்.
அதன்படி வங்கி லாக்கரில் உள்ள வாக்குகளை 4 வாரத்தில் எண்ணி முடிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மறுதேர்தல் தேவையில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு எழுந்த இப்பிரச்னை, மூன்று ஆண்டுகளுக்கு 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்திய செய்தி: வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக: உள்ளாட்சித் தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM