திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தின் பின்பக்கச் சக்கரங்கள் நடுரோட்டில் திடீரென கழன்று ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விவேகம் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பள்ளிப் பேருந்து கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பொண்ணாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது நடுரோட்டில் திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும் கழன்று மூலைக்கு ஒன்றாக சிதறி ஓடின. ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்படி அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.