தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி எனும் தமிழக அரசின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதாக கூறியுள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பது எளிய மாணவர்களின் உயர் கல்வியைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை என பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். இது தடுக்கப்பட வேண்டுமென்றும், உயர்கல்வியில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும், இது விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும் பொன்முடி தெரிவித்துள்ளார். வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து அரசின் நிலைப்பாடு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM