நேரடி தேர்வால் மனவேதனை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில வசித்து வந்த 17 வயது 10-ம் வகுப்பு மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்து வந்தான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வேகமாக பரவியது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து விஸ்வரூபம் எடுத்து 3-வது அலையாக வீசியது. இதனால் இந்த வருடம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. எப்படியும் இந்த முறையும் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பார்கள். அல்லது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வு நடத்துவார்கள் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஒமைக்ரானால் பலி எண்ணிக்கை அதிகமாக இல்லாத காரணத்தினாலும்,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தினாலும், பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதனாலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பருவத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் மாநிலங்கள் நேரடி வகுப்புகளை நடத்துவதில் தீவிரமாக உள்ளன.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று கணக்கு பரீட்சை எழுதிய மாணவன் ஒருவர் தனது வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். அவர் தினந்தோறும் காலையில் எழுந்து படிக்க அலாரம் வைப்பது வழக்கம். இன்று காலையில் நீண்ட நேரம் அலாரம் அடித்துக் கொண்டே இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நேரடி தேர்வுகள் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்தான் என மகனை இழந்த தந்தை சோகத்துடன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.