இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள ’விசித்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பத்மகுமார், ஆர்.கே சுரேஷ், பாலா உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.
மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார்.
மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் ‘விசித்திரன்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசையவெளியீட்டு விழாவில் ஆர்.கே சுரேஷ், இயக்குநர் பத்மகுமார், தயாரிப்பாளர் பாலா உள்ளிட்டோர் பேசினர். இயக்குநர் பத்மகுமார் பேசும்போது,
”என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள். சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்த நாளில், என் படத்திற்காக மேடை ஏறுவேன் என நான் நினைக்கவில்லை. அதற்கு இரண்டு பேருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பாலா சார் மற்றும் சுரேஷ் இருவருக்கும் பெரிய நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். அவரத்தொடந்து பேசிய, ஆர். கே சுரேஷ்,
”என் தந்தை, என் அம்மா அவர்களுக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 ஆண்டுகளாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முன்னால் நான் நடிகனாக மாறி வந்துள்ளேன். ’ஜோசப்’ படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பாலா அண்ணனிடம் போய் சொன்னேன். ”இது நல்ல படம். ஆனால், இந்தப் படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார். இந்தப் படத்திற்காக உடல் எடையை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால்தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம்” என்று பேசினார்.
”வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்றபோது, சுரேஷ் ’நான் பண்றேன் அண்ணா’ என்றான். அப்போ அதே இயக்குநரை அழைப்போம் என அவரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். அதை, அவன் காப்பாற்றி கொள்ள வேண்டும்” என்று கடைசியாக அனைவரையும் பாராட்டிப் பேசினார் பாலா.